டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியை சந்தித்தபோது தமிழக திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.
தமிழக சட்டசபையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா படம் திறக்கப்பட இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது.
சென்னையில் டிசம்பர் மாதம் இறுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.

அப்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசினீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், அதுபற்றி பேச வில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.
முன்னதாக பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவின் சாராம்சத்தை நிருபர்களிடம் அவர் விளக்கினார்.







