அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் உங்களுக்காக டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் சுனில் ஏற்பாடு செய்திருந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழா தி.நகர் பனகல்பார்க் அருகே இன்று காலை நடைபெற்றது.
இதை மைத்ரேயன் எம்.பி. திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
அப்போது மைத்ரேயன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க இரு அணிகளும் இணைவது பேச்சுவார்த்தையை பொறுத்து தான் அமையும்.
பேச்சுவார்த்தைக்கான அடிப்படை நிபந்தனைகளை ஓ. பன்னீர்செல்வம் விதித்துள்ளார். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கான முகாந்திரம் அமையும்.
ஏற்கனவே கழகத்தின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கிறோம்.
அது குறித்து வாதங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. எனவே தேர்தல் ஆணையம் முடிவை விரைவில் அறிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என்று அனைத்து தரப்பு கழகத்தினரும் ஓ. பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை வைத்து பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனில் கொடுத்துள்ளோம்.
இது தொடர்ந்து நடைபெறும். விரைவில் ஓ. பன்னீர்செல்வம் வசம் இரட்டை இலை சின்னம் வரும்.
இரு அணிகள் இணைப்பு பற்றி தவறான தகவல்களை 2 அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அந்த லாவணி கச்சேரிக்குள் நான் போக விரும்பவில்லை. நாங்கள் 1½ கோடி தொண்டர்கள் பற்றி கவலைப்படுகிறோம். 122 கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் பற்றி கவலைப்படவில்லை.

இந்த ஆட்சியை பொறுத்த வரையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து சொல்லவில்லை. ஆட்சியின் அலங்கோலம், அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு அதன் காரணமாக பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்.
இந்த ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா சம்பந்தமாக 3 அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் தங்கள் பணியை தொடரவிடாமல் தடுத்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இப்போது நடைபெறும் ஆட்சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எந்த திட்டமும் எடுக்கப்படவில்லை. மக்கள் ஆதரவும் ஆட்சிக்கு இல்லை.
எங்களை பொறுத்தவரை நாங்கள் கழக தொண்டர்களை நம்புகிறோம். தமிழக மக்களை நம்புகிறோம் அது தான் எங்களது பலம்.
சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.
நீர்மோர் பந்தலில், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர், போன்றவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சரஸ்வதி ரங்கசாமி, எழுமலை, பத்மினி சுந்தரம், ராஜ் குமார், வட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் உள்பட எராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். உங்களுக்காக டாக்டர் சுனில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.







