நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதால் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய கர்ணன் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின்னரும், அவர் நீதிபதிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறியதால், அவருக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி கர்ணன், தனக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு கூறியது.
இந்த உத்தரவை ஏற்று மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி. உடனடியாக கர்ணனை கைது செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தில் தங்கினார். அவரை பிடிப்பதற்காக மேற்கு வங்காள டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., துணை ஆணையர், உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் கடந்த 10-ந்தேதி விமானத்தில் சென்னை வந்தனர். ஆனால் கர்ணன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேறினார். ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கர்ணனை பிடிப்பதற்கு அங்கு விரைந்த போலீசார் தடா அருகில் உள்ள சூலூர்பேட்டை வரை சென்று விட்டு சென்னை திரும்பினர்.
கடந்த 4 நாட்களாக கொல்கத்தா போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர். கர்ணனை கைது செய்வதற்காக தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
கர்ணன் தங்கி இருந்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை எண் 3 இன்னும் காலி செய்யப்படாமலேயே உள்ளது. வக்கீல்கள் சிலர் அங்கு தங்கியுள்ளனர். இதனால் விருந்தினர் இல்லம் முன்பு திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்று கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. பதிவாளர் மூலமாக முறைப்படி, விதிகளுக்குட்பட்டு கர்ணனின் மனு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் சுப்ரீம் கோர்ட்டு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, முத்தலாக் விவகாரத்தை விசாரித்த போது, கர்ணனின் வக்கீல், மேத்யூஸ் நெடும்பரா ஆஜரானார். கடந்த 9-ந்தேதி நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 மாத சிறை தண்டனையை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், இதற்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி முறைப்படி தலைமை பதிவாளர் மூலமாக மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று கூறிவிட்டார். இப்படி கடந்த 2 நாட்களாக கர்ணனின் மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்று கொள்ளப்படவில்லை.
இதனால் நீதிபதி கர்ணனுக்கு ஏற்பட்ட சிக்கல் நீடித்து வருகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்கிற உத்தரவு அப்படியே நீடிப்பதால் கொல்கத்தா போலீசார், தேடுதல் வேட்டையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகனிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று அவரது கார் டிரைவரிடமும் விசாரித்தனர். கர்ணன் கடைசியாக யார்-யாரிடம் போனில் பேசினார் என்பது பற்றிய தகவல்களை சேகரித்துள்ள போலீசார் அதனை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ணனை கைது செய்வது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று இரவு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தும் ஆலோசனை நடத்தினர். இதன் மூலமாக கர்ணனை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.







