ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆப்கானிஸ்தான் தலைவன் கொல்லப்பட்டான்!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் சுமார் ஆயிரம் பேர் தற்கொலைப்படை கூட்டமாக இயங்கி வருகின்றனர். காபுல் நகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி மீது கடந்த மார்ச் மாதத்தில் இவர்கள் நடத்திய தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் பெண்கள் உள்பட பலர் பலியாகினர்.

இந்த தீவிரவாதிகளை ஒழித்துகட்ட ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவமும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது கடந்த மாதம் 27ந்தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் நடத்தின. அதிபயங்கர வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாய் குண்டு என்றழைக்கப்படும் அதிநவீன குண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் தீவிரவாதிகள் உடல் சிதைந்து பலியாகினர்.

இந்த தாக்குதலின்போது ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவன் அப்துல் ஹசிப் கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் தற்போது தெரிவித்துள்ளன. இந்த தகவலை ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைப்பிரிவின் தளபதியான ஜான் நிக்கோல்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

காபுல் நகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அப்துல் ஹசிப் கொல்லப்பட்டது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.