சீனா: நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவுக்கு 18 தொழிலாளர்கள் பலி

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மாகாணத்திற்குட்பட்ட ஹுவாங்பென்கியாவ் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆழமான ஒரு பகுதியில் மேலும் தோண்டியபோது பூமியின் அடியில் இருந்து திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி மூச்சுத்திணறலால் திக்குமுக்காடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் 37 பேரை உயிருடன் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளே சிக்கியிருந்த மேலும் சிலரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் 18 பிரேதங்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், இதுபோன்ற சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தேவையான பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காததால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.