ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவும், நாடு முழுவதிலும் மது அருந்துவதும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட வேண்டும். நெடுஞ்சாலைகளில் கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்கள் குறையும்.

சீன அரசாங்கம் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ததையடுத்து, அந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. சீனாவுடன் போட்டி போட விரும்பினால், நாம் மது மற்றும் போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும்.
எனது மாநிலத்தில் (பீகார்) மதுவுக்கு தடை விதித்தபோது, இதனால் அரசின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்தார்கள். ஆனால், தடை விதிக்கப்பட்ட பிறகு, அது வருவாயில் எந்த தாக்கத்தையும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட சமமாகவே இருக்கிறது. மதுவுக்கு தடை விதித்த பிறகு, அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், பால் போன்ற ஆரோக்கிய உணவுகள் உட்கொள்வது அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள், ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசால் முறையாக கையாள முடியவில்லை. பின்தங்கிய மாநிலமான பீகாரில் கடந்த ஆண்டு ஒரு விவசாயி கூட, தற்கொலை செய்துகொள்ளவில்லை. விளைபொருட்களுக்கு உரிய விலையைபீகார் அரசு வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.







