தனிக்கட்சி தொடங்கியுள்ள தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் பேரவையில் இருப்பவர்களை தனது கட்சியில் வந்து இணைந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா, பேரவை ஒன்றை தொடங்கினார்.
பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் தீபாவுக்கும், அவர் கணவர் மாதவன் பேட்ரிக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தீபாவின் வீட்டை விட்டு, மாதவன் வெளியேறி, தனிக்குடித்தனம் நடத்தினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தீபா போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, மாதவன் பேட்ரிக் பிரசாரம் செய்யவில்லை. சென்னை, தி.நகர், சிவஞானம் தெருவில் உள்ள, தீபா வீட்டுக்கு மாதவன் பேட்ரிக், சமீபத்தில் வந்தார். தீபா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாதவன் பேட்ரிக் ஆதரவாளர்களும், தீபா வீட்டு ஊழியர்களும் மோதி கொண்டனர். தற்போது, தீபா வீட்டின் மாடி அறையில், மாதவன் பேட்ரிக் தங்கியுள்ளார். கீழ்தளத்தில் தீபா வசிக்கிறார். இருவருக்கும் இடையே, அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாதவன் தொடங்கியுள்ள புதுக்கட்சியில், தீபாவின் பேரவை உறுப்பினர்கள் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், தீபா எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார். இதனால், பேரவை நிர்வாகிகள், தீபாவை சந்திக்க முடியாமலும், பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த முடியாமலும் தவிக்கின்றனர்.
அதிருப்தி அடைந்துள்ள தீபா பேரவை நிர்வாகிகள், மாவட்ட வாரியாக, ரகசிய கூட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியில் இணைய பேச்சு நடத்தியுள்ளனர். நாமக்கல், கடலுாரை சேர்ந்த நிர்வாகிகள், பன்னீர் அணியில் இணைய அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







