தமிழக விவசாயிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதி

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி நேரில் சந்தித்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அதன் தலைவர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினந்தோறும் நூதன முறையில் போராடி வருகிறார்கள். எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி, இலை, தழைகளை சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை அடித்தல், அங்க பிரதட்சணம், ஆடைகளை கிழித்தல், சாட்டையடி, தாலி அறுத்தல், சிறுநீர் குடித்தல், நிர்வாணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த தொடர் போராட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பலமுறை டெல்லியில் விவசாயிகளை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து விட்டனர்.

இதற்கிடையே டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் மத்திய கொள்கை குழு (நிதி ஆயோக்) கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றிருந்தார்.

இன்று காலை 7.15 மணியளவில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் ஜந்தர்மந்தர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரை வரவேற்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர். மேலும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து போராட்டக் குழு தலைவர் அய்யாக் கண்ணுவிடம் பரிவுடன் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் 41-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும், அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காகவே இன்று நேரில் சந்திக்க வந்துள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு இதுவரை விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுதான் செயல்பட்டு வந்துள்ளது. 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி ஜெயலலிதா முதல்வரானதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார்.

அதேபோல, தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை, இரண்டு பருவ மழைகளும் பொய்த்ததின் காரணமாக, 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்திலே நிலவிக் கொண்டிருக்கின்றது.

அந்த வறட்சியால் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்பட்டு, அந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். பிரதமரை நானே நேரில் சந்தித்து 39,565 கோடி எங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தோம்.

வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 2,247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகையெல்லாம் வங்கியின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு, புதியதாக பயிர் செய்த விவசாயிகளுக்கும் பயிர்க்கடனும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் இருக்கின்ற நீரைசேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை தமிழகத்திலே துவங்கி, அதற்கு 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கி, 1519 ஏரிகள் இப்போது தூர்வாரப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தத் திட்டம் விரிவுபடுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு, செய்து வருகிறது. இங்கே விவசாயிகளினுடைய பிரதிநிதிகள், அதனுடைய தலைவர் அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தி கூறுவேன்.

விவசாயிகளுக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே தமிழக விவசாயிகள் தங்களின் 41 நாள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்பவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தம்பிதுரை எம்.பி. கூறுகையில், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அதற்காக பாடுபடும். இன்று டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதல்வர், பிரதமரிடம் கோரிக்கைகளை வலியுறுத்துவார் என்று நம்புவோம். நானும் பலமுறை வந்து விவசாயிகளை சந்தித்து பேசியதோடு அவர்களின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் நேரில் அளித்துள்ளேன் என்றார்.