திருமணத்துக்கு முன் கர்ப்பமாகும் கதை: அக்‌ஷரா ஹாசன் படத்துக்கு எதிராக போராட்டம்

திருமணத்துக்கு முன்பு பெண்கள் கர்ப்பமாவது தவறு இல்லை என்பது போன்ற சர்ச்சை கருவை மையமாக வைத்து இந்தியில் புதிய படம் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘லாலி கி சாதி மெய்ன் லாட்டூ திவானி’ என்று பெயரிட்டு உள்ளனர். இதில் திருமணத்துக்கு முன்னால் கர்ப்பமாகும் 18 வயது இளம் பெண் கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘ஷாமிதாப்’ என்ற இந்தி படத்தில் அமிதாப்பச்சன்-தனுசுடன் நடித்துள்ளார். ‘விவேகம்’ படத்தில் அஜித்குமாருடன் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது திருமணமாகாமல் கர்ப்பமாகும் சர்ச்சை கதையில் அக்‌ஷரா ஹாசன் துணிச்சலாக நடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வயிறு பெரிதாக இருக்கும் அவரது கர்ப்பவதி தோற்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. கர்ப்பமான நிலையில் மணமேடையில் இருப்பது போன்ற டிரையிலரும் வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் படத்துக்கு எதிராக போராட்டங்களில் குதித்து உள்ளனர்.

மும்பை அந்தேரியில் உள்ள பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு இந்திய கலாசாரத்துக்கு எதிராக படம் எடுத்து இருப்பதாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் அகர்வால் கூறும்போது, “தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘யு, ஏ’ சான்றிதழ் அளித்து உள்ளனர். எனவே படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்க மாட்டோம். யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இல்லை. நமது நாட்டுக்கு இந்த படத்தின் கரு புதுமையான விஷயமாக இருக்கும். இதில் அக்‌ஷரா ஹாசன் துணிந்து நடித்து இருக்கிறார்” என்றார்.