அமெரிக்காவில் நான் நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் தகவல்

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். தற்போது அவர் அமெரிக்காவில் முகாமிட்டு இசை கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார். அங்கு தனது இசையில் உருவான பாடல்களை அவர் பாடக்கூடாது என்றும், மீறினால் காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் வக்கீல் நோட்டீசு அனுப்பினார்.

இதனால் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், “இனிமேல் என்னுடைய மேடை கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்” என்று அறிவித்தார்.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, ரொக்க பணம் போன்றவை அமெரிக்காவில் திருட்டு போய் விட்டதாக தகவல் வெளியானது. இதனால் அவர் தவிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது. பாஸ்போர்ட் தொலைந்து போன தகவலை அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் அவருக்கு மாற்று ஏற்பாடாக புதிய பாஸ்போர்ட் வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

“அனைவருக்கும் வணக்கம். எனது பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகள் பறிபோனது குறித்து ‘பேஸ்புக்’ பக்கத்தில் நான் தகவல் வெளியிட்டு இருந்தேன். இதனால் எனது ரசிகர்கள் பலரும் பெரிய வருத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.

நான் அமெரிக்காவில் தவிப்பதாகவும் தகவல் பரவி இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன். எனது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் மூலம் திரும்ப பெற்று விட்டேன். இதுவரை 9 இசை நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து விட்டேன். மீதியுள்ள நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். நான் எதையும் இழந்து விடவில்லை. எல்லோருடைய அன்பையும் பெற்று இருக்கிறேன்.

எனவே நீங்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். எனக்கு எந்த கெடுபிடிகளும் இல்லை. அனைவருடைய ஆசீர்வாதத்தால் நலமுடன் இருக்கிறேன்”.

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.