சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கங்கையமரன் வேட்பாளராக போட்டியிடுவதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு முன் ஏற்பாடாக கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று மாலை 6.30 மணியளவில் சென்னை தண்டையார்பேட்டை, ஏஎன்ஆர் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார்.
அதில், நான் உட்கார்ந்து கொண்டு பேசி, சட்டமன்றத்தில் கங்கையமரனை உட்கார வைப்போம். பாஜக வெற்றி எழுதப்பட்ட விதி. மக்கள் மனதில் பாஜக பதிந்த கட்சி. வசைபாடும் மன்றத்தை இசைபாடும் மன்றமாக மாற்றவும், புதிய இந்தியாவைப்போல் புதிய தமிழகமாக மாற்ற வேண்டும். லஞ்ச ஊழலற்ற தமிழகமாக மாற்ற கங்கையமரனை வெற்றிபெற வைக்க வேண்டும் எனப் பேசினார்.
மேலும், அவர் பேசுகையில், சசிகலா அணியான அதிமுக(அம்மா) கட்சியை கிண்டலடித்து, அம்மாவையே காப்பாற்ற முடியவில்லை. அம்மா வளர்த்த கட்சியை எப்படி காப்பாற்றுவார்கள் என்றும், தப்பு செய்தாலும் விடமாட்டோம், தொப்பி போட்டாலும் விடமாட்டோம் என்றார்.
தொடர்ந்து பாஜகவை தொல்திருமாவளவன் விமர்சனம் செய்துவருகிறார். அவரைக் கேட்கிறேன் மக்கள் நலக்கூட்டணியை ஒன்று சேர்க்க முடியவில்லை எங்களை விமர்சனம் செய்வதாக என கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் அணியினரை கூறும்போது, அம்மாவின் சாவில் நியாயம் கேட்க கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் அந்த அணியில் இருக்கும்போது கேட்க வேண்டியதுதானே என்றார்.
திமுகவை பற்றி பேசும்போது, திராவிட முன்னேற்றக்கழகமா? இல்லை திகார் முன்னேற்றக்கழகமா? அவர்களைப் பற்றி கவலையில்லை. நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. அதில் ஒரே தேசியக்கட்சி பாஜக தான் இருக்கிறது. இது கூட்டிய கூட்டமல்ல தானாக கூடிய கூட்டம்.
ஆர்.கே.நகரில் பாதிக்கு பாதி டாஸ்மாக் கடைதான் உள்ளது. மீனவர்களின் அடிப்படை பிரச்சனைகளை போக்க கங்கையமரனை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார். பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, கரூர் நாகராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.







