லைகா நிறுவனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரஜினிகாந்தின் இலங்கை பயணம் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் லைகா அறக்கட்டளை சார்பில் 150 வீடுகள் கட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் 150 தமிழ் குடும்பங்களுக்கு வழங்க திட்டமிட்டதாகவும், இதற்காக நேரில் வந்து உதவிகளை வழங்க நடிகர் ரஜினிகாந்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரசியல் சுயலாபத்திற்காக அவரது பயணம் குறித்து சிலர் சர்ச்சை எழுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள லைகா, இதன் காரணமாக ரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.
மேலும் லைகா நிறுவனத்திற்கும் முந்தைய ராஜபக்ச அரசிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய வதந்திகளை தமிழக அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப பேசுவது கண்டிக்கத்தக்கது என்று லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி தெரிவித்துள்ளார்.







