சசிகலா போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் : டிடிவி தினகரன்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்னை போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து திமுக தனது வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. மார்ச் 13ம் தேதி அது நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக.

இதனிடையே அதிமுகவில் சசி அணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சசி அணியின் சார்பாக வேட்பாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் போட்டியிடக் கூடும் என்று கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மயிலாப்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் எனவும், அதிமுக ஆட்சி மன்ற குழு முடிவெடுக்கம் நபரே ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் கூறினார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி என்றார்.

முன்னதாக டி.டி.வி.தினகரன் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2004ஆம் ஆண்டு பெரியகுளம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார்.

2011ஆம் ஆண்டு சசிகலா உள்பட குடும்ப உறுப்பினர்களை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கும்போது தினகரனும் நீக்கப்பட்டார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா இப்போது தினகரனை கட்சியில் சேர்த்து துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி உள்ளார்.