ஜெயலலிதாவின் மறைவு செய்தி திடீரென அறிவிக்கப்பட்டதால் அவர் சாகடிக்கப்பட்டார் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பினாமி ஆட்சி நடக்கிறது. அடிப்படை உறுப்பினரே இல்லாதபோது, தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளர் என கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரையுமே பார்க்க அனுமதிக்காததால் சந்தேகம் வலுக்கிறது. அவரது மரணமும் திடீரெனவே அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் சாகடிக்கப்பட்டார் என்ற உண்மையையே காட்டுகிறது. தினகரன் கட்டுப்பாட்டில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் விரைவில் ஓபிஎஸ் தலைமைக்கு வரவுள்ளனர். விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்றார்.







