ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டி அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பந்துவீச்சு தர வரிசையில் அஸ்வின், ஜடேஜா முதலிடத்தை பிடித்தனர். இருவரும் 892 புள்ளிகள் பெற்று உள்ளனர்.

அஸ்வின் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 2-வது இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அவர் அஸ்வினுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்தார். அஸ்வின் இந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேகப்பந்து வீரரான ஸ்டெய்னும் (தென்ஆப் பிரிக்கா), சுழற்பந்து வீரரான முரளீதரன் (இலங்கை) ஆகியோர் கூட்டாக முதல் இடத்தை பிடித்து இருந்தனர்.

தற்போது சுழற்பந்து வீரர்களான அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஹாசல்வுட் (ஆஸ்திரேலியா) 3-வது இடத்திலும், ஹெராத் (இலங்கை) 4-வது இடத்திலும், ஸ்பெயன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன்சுமித் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 936 புள்ளியுடன் உள்ளார்.

இந்திய அணி கேப்டன் வீராட்கோலி 847 புள்ளியுடன் 3-வது இடத்தை பிடித்தார். ஜோரூட் (இங்கிலாந்து) 848 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

ஆல்ரவுண்டர் வரிசையில் அஸ்வினை முந்தி வங்காளதேச முன்னாள் கேப்டன் சகீப்-அல்-ஹசன் முதலிடத்தை பிடித்தார்.

பெங்களூர் டெஸ்டில் பெற்ற வெற்றி மூலம் இந்தியா டெஸ்ட் தர வரிசையில் ‘நம்பர்-1’ இடத்தை தக்க வைத்தது. இதன் மூலம் ரூ. 6½ கோடி ஊக்க தொகையை பெறுகிறது.