கேப்டன் பதவியில் சிறந்த வெற்றி: விராட் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 75 ரன்னில் வென்று பதிலடி கொடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 276 ரன் எடுத்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் இந்தியா 274 ரன் எடுத்தது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை ஆஸ்ரேலியா எளிதில் எடுத்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் சுழற்பந்து வீரர் அஸ்வினின் மாயாஜால பந்துவீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி கொடுத்தது.

4 டெஸ்ட் கொண்ட 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அஸ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் 4 வீரர்கள் (நாதன் லயன், ஜடேஜா, ஹாசல்வுட், அஸ்வின்) 6 விக்கெட்டுகள் மேல் எடுத்து உள்ளனர்.

140 ஆண்டுகால வரலாற்றில் 4 பவுலர்கள் ஒரே டெஸ்டில் இச்சாதனையை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுக்கு கிடைத்த இனிமையான வெற்றி. மிகவும் சிறப்பானது. நாங்கள் அணியாக செயல்படுகிறோம். முதல் டெஸ்டில் நாங்கள் தோற்றோம். இப்போது கூட்டு முயற்சியால் வெற்றி பெற்று இருக்கிறோம். வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

இது ஒரு சிறந்த வெற்றி. எனது கேப்டன் பதவியில் கிடைத்த சிறந்த வெற்றி. இந்த போட்டி எங்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்று வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்த வெற்றியை பெற முடிந்தது.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் ராஞ்சியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.