ஊடகவியலாளரைத் தாக்கியமை தொடர்பில் கடற்படைத்தளபதியிடம் விசாரணை!

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்னவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நடைபெற்ற ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றை விடுவிப்பது தொடர்பில் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன நேரடியாக தலையிட்டிருந்தார்.

இதன்போது அங்கு செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது கடற்படைத் தளபதி நேரடித்தாக்குதல் மேற்கொண்டதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன. எனினும் கடற்படைத் தளபதி குறித்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் ஊடகவியலாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மனித உரிமை ஆணைக்குழு, தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஊடகவியலாளரிடமும் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, தொலைக்காட்சி வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் போன்றனவும் விசாரணைகளுக்கான ஆதாரங்களாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விசாரணைகளின் முதற்கட்டமாக, சம்பவம் குறித்து விளக்கம் கோரி கடற்படைத் தளபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.