வானில் இருந்து வானில் தாக்கக் கூடிய புதிய ஏவுகணை: சீனா சோதனை?

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனா அவ்வவ்போது பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து தனது வல்லமையை பறைசாற்றி வருகிறது.
இந்நிலையில்,  தற்போது வானில் இருந்து வானில் தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணை சோதனையை சீனா மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை வானிலேயே 400 கி.மீ தூரத்துக்கு சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஏவுகணையின் புகைப் படத்தை சீனாவின் விடுதலை ராணுவம் தனது இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது.
இருப்பினும் இந்த புதிய ஏவுகணை சோதனை குறித்து சீன அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
விமானப்படை துறையின் செய்தி தொடர்பாளரும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சீனாவிடம் 100 கி.மீ வரை (வானில் இருந்து வானில்) தாக்கக் கூடிய ஏவுகணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், தற்போது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகில் தற்போது அமெரிக்காவிடம் 200.கி.மீ தூரத்துக்கும், ரஷ்யாவிடம் 400 கி.மீ தூரத்துக்கும் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.