டொனால்ட் டிரம்ப் அடாவடி: மெக்சிகோ அதிபரின் அமெரிக்க பயணம் ரத்து!!

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். மேலும், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ  ஈடுசெய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டிரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

டொனால்டு டிரம்ப்பின் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ, தடுப்பு சுவர்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்ல, இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது என கூறியிருந்தார்.

மெக்சிகோ அதிபர் நீட்டோ, வரும் 31-ம் தேதி அமெரிக்க அதிபரை சந்திக்கவிருந்த நிலையில், மெக்சிகோ அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “தடுப்புச் சுவர் கட்டுவதற்கு பணம் தர விரும்பாவிட்டால், மெக்சிகோ அதிபர் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்வதே சிறப்பாக இருக்கும்” என காரசாரமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளதாக மெக்சிகோ அதிபர்  பெனா நீட்டோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ‘வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அறிவித்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.