தந்தைக்கு தர்ப்பணம் செய்த ராமர்!!

ராமர் வனவாசத்தில் இருந்தபோது அவரது தந்தை தசரதன் இறந்து விட்டார். வனவாச காலமான 14 வருடங்கள் ராமர் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்ய முடியவில்லை. வனவாசம் முடிந்து அயோத்தி மன்னரான பிறகும், அவரால் நீத்தார் கடன்செய்ய முடியவில்லை.

எத்தனையோ தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும் தர்ப்பணத்துக்கு பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்கள், தர்ப்பணம் முடிவதற்குள் புழுக்களாக மாறின. இதனால் மன வருத்தப்பட்ட ராமபிரான், சிவனிடம் சென்று முறையிட்டு வேண்டினார். அவரது அருளாசிபடி ராமர், திலதர்ப்பணபுரி சென்று ஈசனை வழிபட்டு தர்ப்பணம் செய்தார். அப்போது அவர் தர்ப்பணத்துக்கு பிடித்து வைத்த பிண்டங்கள் அனைத்தும் மல்லிகை பூக்களாக மாறி மணம் வீசின.

இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட தசரதன், ராமருக்கு ஆசி கூறினார். பின்னர் ராமர் தர்ப்பணம் செய்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. ராமர் தன் தந்தைக்கு தர்ப்பணம் கொடுத்த திலதர்ப்பணபுரி கோவில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் சரஸ்வதி கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.