பொன்சேகாவிற்காக மஹிந்த உருவாக்கிய பதவி! மைத்திரி போடும் திட்டம்

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உருவாக்கிய பதவியொன்றை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி என்ற பதவியை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாரஇறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பதவியை தற்போது எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க வகித்து வருகின்றார்.

கோலித குணதிலக்கவை ஒய்வுறுத்தி அலுவலகத்தை மூட வேண்டுமென ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் 2009ம் ஆண்டில் விசேட சட்டமூலமொன்றின் மூலம் இந்தக் காரியாலயம் நிறுவப்பட்டிருந்தது.

குறித்த காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய தற்போதைய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் நோக்கிலேயே இந்த கூட்டுப்படை பிரதானி பதவி உருவாக்கப்பட்டது.

இந்தப் பதவியை வழங்கி சரத் பொன்சேகாவின் அதிகாரங்கள் முடக்கப்பட்டதும், மஹிந்த அரசாங்கத்துடன் சரத் பொன்சேகா முரண்படுவதற்கு பிரதான ஏதுவாக அமைந்தது என சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் இந்தக் காரியாலயத்தை தொடர்ந்தும் கொண்டு நடாத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பதவியை ரத்து செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.