சத்திய இலட்சியத்திற்காக போராடியவர்களை நினைவுகூரும் நாளே மாவீரர் தினம் – சிறிதரன்

புலிப்படையைச் சேர்ந்த வீரர்கள் தங்களது உயிரை தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் அர்ப்பணித்து விட்டுச்சென்றுள்ளார்கள்.

இதனை நினைவுகூரும் பொருட்டு நாளை(27) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை எல்லோரும் அறிந்த விடயம்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம்(26) மாவீரர் தினத்தைப்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிற்றுரை ஆற்றினார். இதன்போது,

மாவீரர் தினமென்பது தேசத்தின் விடுதலைக்கான நாள். சத்திய இலட்சியத்திற்காக போராடியவர்களை நினைவுகூரும் நாள்.

தமிழருக்காகவும், தமிழ் தேசத்திற்காகவும் வாழ்ந்தவர்களின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும் நாள்.

தங்களது சுய விருப்பு வெறுப்புகளையும், சுகபோகங்களையும் மறந்து தமிழ் சமூகத்திற்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான நாள்.

அவர்களுக்காக மாவீரர் தினமன்று ஏற்றப்படும் சுடரில் உள்ள அக்கினி கொழுந்தில் மக்களும், தியாக வீரர்களின் உறவினர்களும் அந்த தியாகிகளை பார்க்கிறார்கள்.

தமிழர்களுக்காக அவ்வீரர்கள் தங்களது தனிப் பற்று, சுகபோகம் என்பவற்றை இழந்திருக்கிறார்கள்.

தமிழர்களுக்காக பாடுபட்டவர்களை தமிழர்கள் புனிதர்களாகவே நினைவு கூருகின்றார்கள்.

இந்த வீரர்கள் மரணித்திருந்தாலும் கூட காலத்தினால் சாகாதவர்கள். இவர்கள் மக்களின் விடிவிற்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டிருக்கிறார்கள்.

இவர்களின் சாவு ஓர் சரித்திரம். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட இலட்சிய நெருப்பு அழிவதில்லை.

சாவுக்கு அஞ்சாத எதையும் தாங்கும் இதயம் கொண்ட வீரர்கள் அவர்கள்.

இவ்வாறான வீரர்களின் நினைவு நாளில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உள்ள துயிலுமில்லங்களில் அந்த வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது என மாவீரர் தினத்தின் சிறப்பு குறித்து சிறிதரன் கூறினார்.