நான் இந்த நிலைக்கு வர காரணம் ரசிகர்கள் தான்: ரஜினி

‘2.0’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நவீன தொழில்நுட்பத்துடன் கோலாகலமாக நடந்தது. தொகுப்பாளர் அழைப்பை ஏற்று மேடைக்கு ரஜினி வந்தார். சிறிது நேரத்தில் அரங்கின் நடுவில் ஒரு ஷோபாவில் எந்திரன் சிட்டி வேடத்தில் இன்னொரு ரஜினி கால்மேல் கால் போட்டபடி ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தார். இப்போது மேடையில் ரஜினி இல்லை.

இந்த காட்சியை இயக்குனர் ‌ஷங்கர் ஏற்கனவே படமாக்கி, ‘ஹோலோகிராம்‘ செய்து நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேள்வி கேட்க அதற்கு ரோபோ சிட்டி ரஜினி பதில் அளித்தார்.

இவ்வளவு வேகமாக எப்படி அரங்கத்தின் நடுவில் வந்தீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்க, அதற்கு சிட்டி ரஜினி, ‘கண்ணா நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று சொல்ல. தமிழ் தெரியாத தொகுப்பாளர் விழிக்க, உடனே சிட்டி ரஜினி இந்தியில் அதை சொன்னதும், அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.

இது போல் தொடர்ந்து பதில் அளித்த அவரிடம் பாலிவுட்டின் ‘கிங்’ யார் என்று கேட்ட போது ‘மிஸ்டர் அமிதாபச்சன்’ என்று பதில் அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ரஜினியிடம் செய்தியாளர்கள், உங்கள் திரைப்படம் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, புத்தாண்டு போல மாறி விடுகிறது? என்று கேட்க அதற்கு பதில் அளித்த ரஜினி, “ரசிகர்கள் தான் இதற்கு காரணம். அவர்கள்தான் எனது ஒவ்வொரு படவெளியீட்டையும் தீபாவளி போல மாற்றுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது” என்று கூறினார்.