நாட்டை படுகுழியில் தள்ள வரவு செலவுத்திட்டம் உருவாக்கப்படவில்லை : பிரதமர்

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்

வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் இன்று(12) பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டமானது அனைத்து மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது, இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை.

தற்போதைய நிதி திட்டத்தின் படி ஒவ்வொரு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் 500 மில்லியன் முதல் 600 மில்லியன் ரூபா வரையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் ஒவ்வொரு துறைக்கும் கட்டாயம் 800 மில்லியன் ரூபாவரை கட்டாயம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் ஜப்பானையும் சீனாவையும் நம்பி இருக்கிறோம்.

ஆனால் அந்த நாடுகள் யாருடைய உதவியையும் எதிர்ப்பார்த்து தமது பொருளாதாரத்தை கொண்டு செல்லவில்லை

எமது திட்டமிடலின் படி இலங்கையை சிங்கப்பூர் போன்றும் டுபாய் நாட்டை போன்றும் அபிவிருத்தியில் முன்னேற்ற வேண்டும் என நாம் நினைக்கின்றோம்.

இலங்கையில் பூரணத்துவப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரமே ஆட்சி முன்னெடுக்கப்படுகிறது.

எங்களது தற்போதைய திட்டத்தின் படி மத்தல விமான நிலையத்தை கட்டுநாயக்க போன்று மாற்றுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

பதுளை மொனராகலை வெள்ளவாய பகுதிகளை உள்ளடக்கியதான கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த அரசைப்போல ஹம்பாந்தோட்டைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் செயற்பாட்டை நாம் முன்னெடுக்க மாட்டோம்.

பொலன்னறுவையில் பாரிய வேலைத்திட்டமும், கொழும்பு, மாத்தறை, குருணாகலை, இரத்தினபுரி போன்ற பல பாகங்களில் பாதை அபிவிருத்தியையும் முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் மிக சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவதில் அனைவரும் கைகோர்க்க வேண்டும். அதை விடுத்து அரசியலை விமர்சித்துக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என அவர் இதன்போது தெரிவித்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.