திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக்கில் காதல்.. வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுரோட்டில் தவிப்பு

பேஸ்புக் நட்பு காதலான பின்னர், காதலனை கைபிடிக்க வீட்டை வீட்டு வெறியேறிய பெண்ணுக்கு காதலன் திருமணம் ஆனவன் என்பது தெரிந்தது. இதனால் மனம் உடைந்த பெண் தாய் வீட்டிற்கும் போக முடியாமல் காதலனோடும் சேர்ந்து வாழ முடியாமல் அரசு காப்பகத்தில் தங்கும் நிலை உருவாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஜிட்டப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான ரமேஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் நண்பராகியுள்ளார். அன்றாடம் பேஸ்புக்கில் சாட் செய்துள்ளனர். இதனால் இருவருக்குமிடையே இருந்த நட்பு காதலாகவும் மலர்ந்தது. ரமேஷ் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையை சொல்லாமலேயே மறைத்து பழகி வந்துள்ளார். பெண்ணும் இந்த உண்மையை அறியாமல் பழகி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரமேஷ் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளும் ஆசையைக் காட்டி வீட்டை விட்டு வந்துவிடுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய பெண், தான் பிறந்த வீட்டை விட்டு வெளியேறி ரமேஷின் சொந்த ஊரான குடியாத்ததிற்கு வந்துள்ளது.

இதற்கு முன் இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததில்லை. வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படங்களில் இருவருமே அழகாக இருந்த வேறொருவருடைய புகைப்படத்தையே அனுப்பியுள்ளர். இதனால் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்துள்ளது. கடைசியில் செல்போனில் பேசி, போட்டிருந்த உடையின் நிறத்தை வைத்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுள்ளனர். அப்போதுதான், இருவருமே வேறொருவரின் புகைப்படத்தை காண்பித்து ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவருமே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இதனால், இருவருக்கும் அதே இடத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், பெண் வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டதால், மீண்டும் தாய் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாத சூழல் உருவானது. இப்படி ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டதால் நடு ரோட்டிலேயே அந்தப் பெண் கதறி அழுதுள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிய வரவே, பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் தான் மதுரையில் இருந்து வந்திருப்பதாக மட்டுமே தெரிவித்தார். மற்ற தகவல்களை வெளியிடவில்லை. மேலும், வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது என்பதையும் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட சமூக, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினி மூலம் வேலூர் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.