மஹிந்தவிடம் இருந்த மோசடி கோப்புகள் தற்போது ரணில் கையில்..!

சமகால அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களின் கோப்புகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் செயலகத்தை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பல கோப்புகள் உள்ளன.

இந்த கோப்புக்களை விசாரிப்பதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு குழு எனப்படும் அமைச்சரவை உபகுழுவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையில் மோசடியாளர்கள் இருந்தார்கள் எனவும், அதற்கான கோப்புகள் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கோப்புகளும் தற்போது பிரதமரிடம் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதைய அமைச்சரவையில் உள்ள கடந்த அரசாங்கத்தின் போது பொறுப்பில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் பலர் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் குறித்து விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கடுமையாக எச்சரித்திருந்தார்.

பிரதமரின் கடுமையான எச்சரிக்கையினால், நல்லாட்சி அரசாங்கத்தை உடைப்பதற்காக சில அமைச்சர்கள் இரகசியமாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் அரசாங்கம் மற்றும் பிரதமரை இலக்கு வைத்து ஊடகங்கள் ஊடாக கொண்டு செல்லப்பட்ட சில அடிப்படையற்ற பிரச்சாரங்கள் தொடர்பில் பிரதமர் கடுமையாக கோபமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விரைவில் பிரதமர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.