ஆவா குழு விடுதலைப் புலிகளாம்? புதிய கண்டுபிடிப்பு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட்டை முன்னுதாரணமாகக் கொண்டு, யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் ஆவா குழுவை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா என்ற சிங்கள பேரினவாத இயக்கம், இராணுவப் புலனாய்வாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை ஆவா குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னால் உறுப்பினர்கள் என்று புதிய கதையை கட்டவிழ்த்து விட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர், ஆவா குழுவை அழிக்காவிட்டால், இதனைவிட ஆபத்தானவர்கள் விரைவில் வெளியில் வருவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் – ” சுயசிந்தனையற்ற இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டினாலேயே இன்று ஆவா, கியா போன்ற புனர்வாழ்வுப் பெறாதவர்களின் குழுக்கள் வடக்கில் உருவாகி இருக்கின்றன.

எமது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஓரினச்சேர்க்கை பிரச்சினை காணப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவின் பிரதானியை பதவிநீக்கக் கோருகின்ற விடயத்தில் மங்கள சமரவீர நிழலாய் செயற்படுகின்றார்.

வெளிநாட்டு சக்திகளின் இலகுவான இறைதான் மங்கள சமரவீர என்பவர். மங்கள சமரவீர தாம் பழகுகின்ற பிரிவினரைப் பார்க்கும்போது நாடு சம்பந்தப்பட்ட தீர்மானங்களையும் அவ்வாறே மேற்கொள்கின்றார் என்றுதான் தெரிகிறது.

வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் மங்கள சமரவீர தலைகீழாக்கும் முயற்சியில் செயற்படுவதானல்தான் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆவா என்கிற பலவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு வெளிக்கிளம்புகின்றனர்.

ஆவா குழு அங்கு எழுகின்ற அதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வடக்கிலுள்ள பௌத்த சிலைகளை அகற்றுமாறு கிறிஸ்தவ மிஷனரிகள் கூறுகின்ற நிலையில் பௌத்த சமூகத்தினரில் உள்ள பேராசிரியர் சரத் விஜேசூரிய உள்ளிட்ட சிலர் புலனாய்வுப் பிரிவின் பிரதானியை நீக்குமாறு கோருகின்றனர்.

இவ்வாறான வேலைகளுக்கு அமெரிக்கத் தூதரகத்திடம் இருந்து பாரியளவான பணத்தொகை சிவில் அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகின்றது. எனவே பணம் பெறுகின்ற இந்த சிவில் அமைப்புக்களும், பேராசிரியர்களும் தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை. பெரஹெர திருவிழாக்களில் சாட்டை அடித்துக்கொண்டு செல்பவர்கள் முன்னாலும் அதை விடவும் திறமையானவர்கள் பின்னாலும் வருவார்கள்.

அதேபோலதான் ஆவா என்ற பெயரில் முன்னால் குழுவொன்று வந்துள்ளது. அதை விடவும் பாரிய நாசகார வேலைகளை செய்பவர்கள் இன்னும் வெளியே வரவில்லை. இதனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதை விடுத்து, நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிலிப்பைன்ஸ் புதிய ஜனாதிபதியை முன்னுதாரணமாகக் கொண்டு மனித உரிமைகளை மறந்துவிட்டு ஆவா போன்ற குழுக்களை உடனடியாக அழித்துப் போடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.