மீண்டும் யுத்தம் ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது! – கீரிமலையில் ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை நேற்று பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் இறுதியில் மோசமான யுத்தமாக மாறி நாட்டுக்கு மிகப்பெரும் அழிவைக் கொண்டுவந்தன. நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்” என்றார்.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் மரணமடைந்தமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில் அல்லது தெற்கில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது எல்லோருடையவும் பொறுப்பாகும் என்றும் கூறினார். இதேவேளை, “நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பொறுப்பாகும்” என்றும் குறிப்பிட்டார்.