வெயிலின் தாக்கத்தை தணிக்க என்ன செய்ய வேண்டும்…

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை டாக்டரான மாணிக்க வாசகம்

கூறியதாவது:- பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களான அம்மை, சூட்டு கொப்பளம், கண் எரிச்சல், தலை சுற்றுதல், சிறுநீரக கல் உள்ள பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

* வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.

* நமது பாரம்பரிய பானங்களான நீர்மோர், பதநீர், நுங்கு, இளநீர், கூழ் வகைகள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைப்பதுடன், வெயிலால் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளும் கிடைக்கிறது.

* இயற்கையாக கிடைக்கும் கரும்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதுடன், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

* சித்த மருத்துவ மூலிகையான நன்னாரி வேரினை கொண்டு தயாரிக்கப்படும் மணப்பாகுவை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் எரிச்சலில் இருந்து பாதுகாக்கலாம். நமது தாகமும் தணியும்.

* வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் அம்மை, சிறுநீரக கல் போன்றவை வராமல்பார்த்து கொள்ளலாம்.

* இரவில் தூங்கும் போது கால் பாதத்தில் நெய் தேய்த்து கொண்டு தூங்கினால், கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.

* குறிப்பாக நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலைங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

* வெள்ளரிக்காய் சாப்பிடுவதுடன், உடலில் அதனை பூசிக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் தோல் அலர்ஜியில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

* எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்பானங்கள், குளிர்சாதன பெட்டிகளில் வைத்த குளிர்ந்த தண்ணீர், செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.