கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர் – அபிராமி வேதனை

சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர் என்று நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “நானும் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி தான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலேயே குரல் கொடுப்பேன். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.

கலாஷேத்ரா ஆசிரியர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர். ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்” என்று கூறினார்.