மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய முதலாம் தொகுதி செயலிழப்பு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது.

மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு நேரம் நீடிப்பு
இதன்காரணமாகவே மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும், நாளைய தினமும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.