பிரான்சில் கடும் வரட்சி

பிரான்சின் பெரும்பாலான இடங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பல இடங்களில் வெப்ப அலையும், காட்டுத்தீயும் மக்களை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்சின் பெரும்பாலான பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரான்சின் 96 முக்கிய பகுதிகளில் 86 பகுதிகளுக்கு வெவ்வேறு மட்டத்தில் வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வறட்சி எச்சரிக்கையில் நான்கு மட்டங்கள் உள்ளன.

அவையாவான பிரச்சினை ஏற்படலாம் என கவனமாக இருத்தல், எச்சரிக்கை (மஞ்சள்), அதிகரிக்கப்பட்ட எச்சரிக்கை (ஆரஞ்சு) மற்றும் நெருக்கடி (சிவப்பு). தற்போது பிரான்சிலுள்ள 28 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்கள் எச்சரிக்கையின் மட்டத்துக்கு ஏற்றவாறு தண்ணீரை கவனமாக பயன்படுத்தவேண்டும்.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் விவசாயம் போன்ற விடயங்களுக்காக தண்ணீரைப் பயன்படுத்தும்போது தண்ணீரின் அளவைக் குறைத்து பயன்படுத்தவேண்டும் அல்லது வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு தண்ணீர் எடுக்கக்கூடாது.

அதேசமயம் , மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் கார் கழுவவோ, வெயில் நேரத்தில் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சவோ கூடாது. ஆரஞ்சு எச்சரிக்கை உள்ள இடங்களில் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல் முதலான பல விடயங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

மேலும் சிவப்பு எச்சரிக்கையைப் பொருத்தவரை, அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து வேறு எதற்கும் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது. அதாவது, சுகாதாரம் மற்றும் உடல் தேவைகளுக்காக மட்டுமே தண்ணீர் பயன்படுத்த அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.