பிரான்சில் நாளைமுதல் அமுலாகும் புதிய கொரோனோ விதிமுறைகள்

நாளை சனிக்கிழமை, பிரான்சில் கொரோனா சுகாதார பாஸ் தொடர்பில் முக்கிய மாற்றம் ஒன்று அமுலுக்கு வருகிறது.

பிரான்சில் மதுபான விடுதிகள், காபி ஷாப்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீண்ட தூர ரயில்கள் ஆகிவற்றை பயன்படுத்துவதற்கு சுகாதார பாஸ் அவசியமாகும்.

தற்போது, மேற்குறிப்பிட்ட இடங்களை பயன்படுத்த மூன்றுவிதமான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன;

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம், கொரோனாவிலிருந்து சமீபத்தில் விடுபட்டதற்கான ஆதாரம் அல்லது கடந்த 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரம்.

பிரான்சைப் பொருத்தவரை வயதுவந்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தினர் தடுப்பூசி பெற்றாயிற்று. ஆகவே, பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தையே பயன்படுத்துகின்றனர்.

ஆனால், நாளையிலிருந்து, (ஜனவரி 15) அதாவது சனிக்கிழமையிலிருந்து, விதிகளில் பெரிய மாற்றம் ஒன்று வர உள்ளது.

தடுப்பூசி பெற்றவர்கள், தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்று ஏழு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால், அவர்கள் பூஸ்டர் டோஸ் பெற்றிருக்கவேண்டும்.

அப்படி பூஸ்டர் டோஸ் பெறவில்லையென்றால் அவர்களது சுகாதார பாஸ் செயலிழந்துவிடும். 12 முதல் 17 வயது உள்ளவர்கள் மட்டுமே பூஸ்டர் இல்லாமல் தங்கள் சுகாதார பாஸை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மற்றவர்கள் பூஸ்டர் டோஸ் பெறவில்லையென்றால் அவர்களது சுகாதார பாஸை இனி பயன்படுத்தமுடியாது.

இந்த விதிமாற்றம், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிரான்சுக்கு வெளியில் தடுப்பூசி பெற்றவர்களில் சுகாதார பாஸை பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் பொருந்தும்.

சுகாதார பாஸ் செயலிழந்தால் என்ன செய்வது?

சுகாதார பாஸ் செயலிழந்தால் பதற்றமடையவேண்டாம். அதை புதிப்பிப்பது எளிதுதான். நீங்கள் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் பெற்றிருந்தாலோ அல்லது கடந்த ஆறு மாதங்களில் உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலோ, அதற்கான ஆதாரத்தை பதிவேற்றம் செய்தால் போதும்.

பூஸ்டர் டோஸ் பெறவில்லையென்றால், பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளுங்கள். சுகாதார ஆப்பில் பூஸ்டர் டோஸ் பெற்றதற்கான ஆதாரத்தை பதிவேற்றம் செய்யுங்கள் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால் ஆதார ஆவணத்தை காகித வடிவில் வைத்துக்கொண்டால் போதும்.