பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ததன் மூலம் பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை

வேளாண்மையை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள், மற்ற கண்டுபிடிப்புகளைப்போலவே வழக்கம்போல லாபத்துக்காக செயல்படும் வியாபாரமாகிவிட, உணவுடன் நஞ்சையும் பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும் இயலாத நிலைமைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

புற்றுநோயை உருவாக்கிறது என்று தெரிந்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கும் நிறுவனங்கள், அதிக மகசூலுக்காக அதையே பயன்படுத்தும் விவசாயிகள் என பணத்தையே மையமாகக் கொண்ட ஒரு கூட்டம் ஒரு கட்டத்தில் தாங்களும் அதையேதான் சாப்பிடப்போகிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை பூச்சிக்கொல்லி மருந்துகளிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளதாக ஜேர்மன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதில் ஒவ்வொரு இலங்கையரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

ஆம், பெரிய பெரிய நாடுகள் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் சொகுசாக அமர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என பேசிக்கொண்டு மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கி விட்டதாக ஜேர்மன் ஆய்வு ஒன்று சொல்வது நிச்சயமாகவே நமக்கு பெருமைக்குரிய விடயம்தானே.

கடந்த 20 ஆண்டுகளில், பயங்கரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ததன் மூலம் இலங்கை சுமார் 10,000 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்கிறது அந்த ஆய்வு.

இந்தியாவிலோ, சில பகுதிகளில் முற்றிலுமாகவோ அல்லது பெரும்பாலுமோ பூச்சிக்கொல்லிகள் இல்லாமலே விவசாயம் செய்யத் துவங்கி விட்டார்களாம் விவசாயிகள்.

இதைப்பார்த்து மற்றவர்களும் அதையே செய்ய ஆர்வம் காட்டுவருகிறார்களாம். பசுமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் Heinrich Böll Foundation, Friends of the Earth என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, LE MONDE diplomatique என்னும் சர்வதேச செய்தித்தாள், ஆகியவற்றுடன் The Atlas என்ற ஆய்வு அமைப்பும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆய்வில், ஜேர்மனியில் 16 முதல் 29 வயது வரையுள்ளவர்களில் பெரும்பான்மையோர் பூச்சிக்கொல்லிகளோ, மரபணு மாற்ற விதைகளோ இல்லாத, மண்ணுக்கோ தண்ணீருக்கோ பூச்சிகளுக்கோ ஆபத்தை ஏற்படுத்தாத விவசாய முறை வேண்டும் என்று விரும்புவதாக தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 சதவிகிதத்தினர், 2035வாக்கில் அனைத்து பூச்சிக்கொல்லி மருந்துகளும் தடை செய்யப்படுவதைக் காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், விவசாயிகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய முறைக்கு மாறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களாம்.