பிரித்தானியாவில் அமுலாகும் புதிய சட்டம்

ஆன்லைன் இனவெறி துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என்று பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களின் கீழ், கால்பந்து வீரர்களுக்கு எதிராக ஆன்லைன் இனவெறி துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டுகள் வரை கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் என பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நடைபெறும் போட்டிகளில் வன்முறை அல்லது தவறான நடத்தையை தடுக்க விதிக்கப்பட்ட கால்பந்து தடை உத்தரவுகளின் கீழ், குறைந்தபட்சம் மூன்று மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் விளையாட்டுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்படுகிறது.

யூரோ 2020 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கறுப்பின வீரர்களை குறிவைத்து ஆன்லைனில் இனவெறி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து ஜூலை மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் வெறுப்பு குற்றங்களை தடுப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பயங்கரமான இனவெறி துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள சட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றங்கள், குற்றவாளிகள் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ள தடை செய்யப்படுவதை உறுதி செய்யும் என பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.

பொலிஸ், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்டம் புத்தாண்டு தொடக்கத்தில் கொண்டு வரப்படும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.