அரசை கவிழ்க்க திட்டம்

“எதிர்க்கட்சியினர் மாத்திரமின்றி ஆளுந்தரப்பிலும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் இணைத்துக் கொண்டு பாரிய அரசியல் அரங்கைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்பான பலதரப்பட்ட பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதன் இரகசியத்தன்மையைப் பேணுகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

“எதிர்த்தரப்பினர் தனித்துப் பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அரசுக்குச் சாதகமாகவே அமையும். எனவே, அரசுக்கு எதிரான பாரிய அரசியல் அரங்கைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பியுடன் இணைந்து பயணிக்கத் தயார் என்று தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜே.வி.பி. இந்தச் சந்தர்ப்பத்திலேயே பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள சில நிலவரங்களுக்கு அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். 2005இல் மஹிந்த ராஜபக்ச ஆட்சியமைப்பதற்கு முன்னின்று செயற்பட்டது யார்?

அன்று ஜே.வி.பி. ஆதரவளித்திருக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கமாட்டார். அதுமாத்திரமின்றி 2002இல் சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் பங்கேற்று 8 அமைச்சுக்களில் பதவிகளையும் வகித்தனர்.

ஆனால், நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, எதிர்தரப்பிலுள்ள அனைவரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வருவார்களாயின் எதிர்க்கட்சியினர் மாத்திரமின்றி, ஆளுந்தரப்பில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க நாம் தயார்.

அரசுக்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து பாரிய அரசியல் அரங்கைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. எதிர்காலத்தில் இது நடைபெறும். தற்போதும் நாம் பல்வேறு தரப்பினருடனும் இது தொடர்பான பேச்சுகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்தப் பேச்சுகளின் இரகசியத்தன்மையைப் பேணுவதற்காகவே நாம் பெயர்களை வெளியிடாமல் இருக்கின்றோம். நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு அரசியல் அரங்கொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.

ஜே.வி.பி. உள்ளிட்ட ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் அதற்கான வாய்ப்பு திறந்தே காணப்படுகின்றது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு தரப்பினரும் பிரிந்து செல்லச் செல்ல அது அரசுக்குச் சாதகமாகவே அமையும். அதனை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய அரசியல் கட்சியாகும். எமக்கு அனைவருடனும் ஒன்றிணைந்து கொள்கைகளை உருவாக்க முடியும். அனைத்துக் காரணிகளுக்கும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை.

எனினும், நாடு சார்ந்த பொது காரணிகளில் ஒன்றிணைந்து ஒரே மேடையில் குரலெழுப்ப முடியுமல்லவா? குறிப்பாக ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், தேசிய கொள்கைகளை உருவாக்கும்போதும், சட்ட விதிகளை ஸ்திரப்படுத்தல், முதலீட்டு கொள்கைகள் உள்ளிட்டவற்றில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.

அதற்கமைய ஜே.வி.பி. உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து செயற்பட நாம் தயார் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றார்.