யாழில் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மருத்துவக் கழிவை தீயிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன் தனியார் வைத்தியசாலையின் (Northen Private Hospital) மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்பில் நேற்று அப்பகுதி மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ் மாநகர முதல்வர்,

“எவராக இருந்தாலும் சட்ட விரோதமான முறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ கழிவுகளை எரிப்பதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இந்த பகுதியில் இடம் பெற்றுள்ளதாக இன்று எனக்கு அறியக் கிடைத்துள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில்உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன் இது தொடர்பில் பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.