கொரோனா பாதிப்பு: வாழ்வாதாரத்திற்காக காய்கறி வியாபாரம் செய்துவரும் இந்தி நடிகர்!

கொரோனா வைரஸ் தொற்றால் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த இந்தி நடிகர் ஒருவர் தனது சொந்த ஊரான ஒடிசாவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தொழில்துறைகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ள துறைகளில் ஒன்றாக சினிமா துறையும் உள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடங்கியுள்ளன.

இதனால் இதை நம்பியுள்ளவர்கள் அனைவரும் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதில் ஒடிசாவை சேர்ந்த நடிகர் ஒருவரும் கொரோனாவால் தனது வாழ்வாதரத்தை இழந்ததால் காய்கறி வியாபரம் செய்துவருகிறார். ஒடிசா மாநிலம் கேந்திரபாதா மாவட்டத்தின் கரத்பூர் தொகுதியைச் சேர்ந்தவர் சாஹூ, தனது 17 வயதில் பாலிவுட்டில் நடிப்பதற்காக மும்பைக்கு சென்றார். ஆனால் அங்கு சில ஆண்டுகள் அவர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2018ஆம் ஆண்டு வெளியான லேடி லக் என்ற திரைப்படம் மூலம் திரையில் தோன்றி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.. இதனிடையே கொரோனா பரவலால் சினிமாத்துறை முடங்கியுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த சாஹூ தற்போது தனது சொந்த ஊரான ஒடிசாவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய சாஹூ, நான் திரைக்கு வரவிருக்கும் ‘சூரியவண்ஷி’ என்ற படத்தில் அக்‌ஷய் குமாருடன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். மார்ச் 22 ஆம் தேதி படபிடிப்பு முடிந்த பிறகு ஊரடங்கிற்கு 3 நாட்களுக்கு முன்னர் ஒடிசாவுக்கு வீடு திரும்பினேன். அப்போதிருந்து, எந்த வேலையும் இல்லாமல், தனது குடும்பத்தை பராமரிப்பதற்காக தனது சேமிப்பில் இருந்ததை வைத்து வாழ்ந்து வருகிறேன். ஆனால், நான்கு4 மாதங்களாக எந்த வேலையும் இல்லை மற்றும் மருத்துவ தேவைகள் காரணமாக சேமிப்பு முழுவதும் கரைந்து விட்டது.

இதனையடுத்து வேலைத்தேடி தலைநகர் புவனேஸ்வர் சென்றேன். ஆனால் அங்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில், நான் ரசூல்காட்டில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். ஆனால் நான் துவண்டுவிடவில்லை இன்னும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். இயல்புநிலை திரும்பியவுடன் நான் பாலிவுட்டை நோக்கி பயணிப்பேன் என சாஹூ தெரிவித்துள்ளார்.