இழந்த பணத்தையும், புகழையும் திரும்பப் பெற்றுவிடாலம் ஆனால் நேரத்தை திரும்பப் பெற முடியாது – ஏ.ஆர்.ரஹ்மான்

இழந்த பணத்தையும், புகழையும் திரும்பப் பெற்றுவிடாலம் ஆனால் நேரத்தை திரும்பப் பெற முடியாது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அமைதியாக கடந்து செல்வோம் என்றும், ஆற்ற வேண்டிய பெரும் பணிகள் உள்ளது எனவும் அவர் பதிவிட்டுள்ளார். ஹிந்தி திரைப்பட வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த நிலையில், அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படமான, தில் பேச்சரா நேற்று முன்தினம் OTT-யில் வெளியானது.  இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருதுபெற்ற பிறகு ஹிந்திப் படங்களில் அதிகம் பணியாற்றுவதில்லை என்றும் பாலிவுட்டில், தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
ஹிந்திப்பட வாய்ப்புகளை அந்த கும்பல் திட்டமிட்டு பறிக்கிறது என்றும் ரஹ்மான் குற்றம் சாட்டினார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து கருத்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் ட்விட்டடர் பதிவில், வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். ரகுமான் நீங்கள் ஆண்மான், அரியவகை மான், உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு,  இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், யேசுதாஸ், வாணி ஜெயராம் போன்றோரையும் பாலிவுட் திரையுலகம் புறக்கணித்ததாக இசையமைப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.