கொழும்பை அண்மித்த பிரதேசம் ஒன்றிலுள்ள தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குறித்த விடுதியின் குளியலறையில் நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறந்த குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், மாணவி சிகிச்சைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், உணவு உற்பத்தி தொழிநுட்பவியல் பாடநெறி ஒன்றை கற்றுவந்த, 20 வயதான மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாவது, கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் குறித்த கல்லூரியில் இணைந்துகொண்ட இம்மாணவி, அங்கிருந்த மேலும் 3 மாணவிகளுடன் விடுதியில் தங்கி வந்துள்ளார்.
தனது சொந்த ஊரான மிஹிந்தலைக்கு சென்றிருந்த இம்மாணவி கடந்த 18 ஆம் திகதி மாலை மீண்டும் விடுதிக்கு திரும்பி எவ்வித மாற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் சக மாணவிகளுடன் பேசியதுடன், வீட்டிலிருந்து தான் கொண்டு வந்த உணவுபொருட்களை பகிர்ந்து உண்ட போதிலும் அவர் இரவு உணவை புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில் அன்றைய தினம் இரவு 11 மணியளவில் கடும் வயிற்று வலியினால் அவர் அவதிப்பட்டபோது, சக மாணவி ஒருவர் அவருக்கு வலி நிவாரண வில்லைகளை கொடுத்ததுடன் சில சிகிச்சை முறைகளை கையாண்டுள்ளார்.
எனினும், வலி மேலும் அதிகரித்தமையினால் ஏனைய மாணவிகளும் இது குறித்து விடுதி நிர்வாகிக்கு தெரியப்படுத்த முயன்றபோது, குறித்த மாணவி குளியலறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டு சுமார் 1 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் உள்ளேயே இருந்துள்ளார்.
பின்னர் ஏனைய மாணவிகளிடமிருந்து துணியொன்றை பெற்ற அவர், சிறிது நேரம் கழிந்து குறித்த துணியில் குழந்தை ஒன்றை சுற்றிக் கொண்டு வெளியேறியுள்ளார். இதனால் பதற்ற மடைந்த மாணவிகள் மீண்டும் விடுதி நிர்வாகிக்கு தெரியப்படுத்த முயன்றுள்ளனர்.
எனினும், இந்த விடயத்தை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும், விடிந்தவுடன் தான் ஊருக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு வந்த விடுதி நிர்வாகி, அங்கு தங்கியிருந்த விரிவுரையாளர் ஒருவரை அழைத்து, மாணவியை வைத்திசாலையில் அனுமதித்ததுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
அதன்போது, மாணவியின் கையிலிருந்த குழந்தை உயிரிழந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இம் மாணவி மிஹிந்தலையில் ஒருவருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமாகியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கல்கிஸை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் முதித புஸ்ஸெல்ல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசேகர ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய, கல்கிஸை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.