எனக்கு மனநல சிகிச்சை தேவை.. தயவுசெய்து கூட்டிட்டு போங்க என கெஞ்சிய நிர்மலாதேவி?

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்த பின்னர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை கணவனும், குடும்பத்தினரும் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின் அருப்புக்கோட்டையில் உள்ள தர்காவுக்கு சென்று, தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் நிர்மலாதேவிக்கு மனநல பாதிப்பு என்று செய்திகள் வெளியாகத் தொடங்கின. இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி அவரது வழக்கறிஞர் கோபுவுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், தனக்கு மனநல பிரச்சனை இருப்பதாகவும், உடனே சிகிச்சை பெற தன்னை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கெஞ்சுகிறார். மேலும் அந்த ஆடியோ பதிவில்,

‘சார்.. வணக்கம். நான் ஏதாவது உங்ககிட்ட கோவமா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க. நான் நானாகவே இல்லை. எனக்கு உடனே மனநல சிகிச்சை தேவைப்படுது. தினம் தினம் ஒவ்வொரு கூத்தாக நடக்கிறது. தயவு செய்து என்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு செல்லுங்கள். மதுரைக்கு போகலாம். இல்லை திருநெல்வேலி மருத்துவமனை என்றாலும் பரவாயில்லை.

என்னை உடனே கூட்டிட்டு போங்க சார். இப்படியே கிளம்ப ரெடியா இருக்கிறேன். நிறைய பிரச்சனைகளா இருக்கு. உங்களுக்கே தெரியும் நான் எப்பவுமே அப்படி பேசக்கூடியவள் இல்லைன்னு. ப்ளீஸ் என்ன உடனே மனநல மருத்துவரிடம் கூப்பிட்டுச் செல்லுங்கள் சார்’ எனக் கெஞ்சுகிறார்.