“ஒருவருடத்துக்கு முன் நிறுத்தப்பட்ட சஹ்ரானுக்கு எதிரான விசாரணை”

21/4 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள், தேசிய உளவுத்துறையின் கடிதத்தின் பிரகாரம் ஒரு வருடத்துக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் 2 ஆம் திகதி தேசிய உளவுத்துறை பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியதாகவும், அதில் சஹ்ரான் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உளவுத் துறை நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பகிரங்க விசாரணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அதனை நிறுத்தக் கோரியுள்ளதாகவும் அதனையடுத்தே அந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறித்த கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார்.

அது தொடர்பில் அதே தம் 10 ஆம் திகதி, அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக இருந்த பத்மசிறி ஜயமான்னவுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடிதம் ஊடாக தெரியப்படுத்தியதாகவும், சஹ்ரானுக்கு எதிராக 2016 முதல் கிடைக்கப்பெற்றிருந்த தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் அதனாலேயே தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காடினார்.