தற்கொலை தாக்குதலில் இறந்த தீவிரவாதி சஹரான் உறவினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது….

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கல்முனை சாய்ந்தமருது சுனாமி கிராமத்தில் உள்ள வீடொன்றில், பாதுகாப்புத் தரப்பினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்கள், 6 ஆண்கள், மற்றும் 3 பெண்களின் சடலங்கள் மீட்கப்படிருந்தன.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரின் சடலங்களே அவை என தெரிவிகப்படிருந்தது.

குறித்த சடலங்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.