“மரணம் எங்கள் இலக்கு” என்ற வாட்ஸப் குழுவைத் தொடங்கி தீவிரவாத செயல்கள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சேலம், ராமநாதபுரம், சிதம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தொடர்புடைய சிலர் வாட்ஸ்ஆப் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் முகம்மது ரஷீத் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
முகம்மது ரஷீத் துபாயில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது வீட்டில் இருந்து 2 லேப்டாப்புகள், 2 ஹார்டு டிஸ்குகள், 8 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் சேலம், ராமநாதபுரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து பல இரகசிய தகவல் தேசிய புலனாய்வு முகமைக்கு கிடைத்து வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.






