இலங்கை தாக்குதல் எதிரொலி:கேரளாவிலும் புர்காவிற்கு தடை

கேரளாவில் செயல்படும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று, தனது 150 கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதித்துள்ளது.

இலங்யைில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியாகினர்.

இந்நிலையில், மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் விதமாக இலங்கை அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இதன்படி, மக்களை எளிமையாக அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் கடந்த ஏப்ரல் 29ம் திகதி முதல் பெண்கள் நிக்காப் முகத் திரைகள், மாஸ்குகள், புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு நகரை மையமாக வைத்து செயல்படும் ‘முஸ்லிம் எஜூகேஷனல் சொசைட்டி’ (எம்.இ.எஸ்), கேரள மாநிலத்தில் 10 கல்லுாரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள், 36 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட 150 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவைகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த கல்வி வளாகத்திற்குள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்த கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “முஸ்லிம் கல்விக் குழுமத்தில் பயிலும் மாணவியர் மற்றும் ஆசிரியைகள் எவ்வித முகத்திரைகளையும் வளாகத்திற்குள் அணியக் கூடாது. இது, நடப்பு ஆண்டின் (2019-20) புதிய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு, ‘கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள உடைநெறிகளில் மாற்றம் செய்யலாம்’ என்ற உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே எடுக்கப்பட்டுள்ளது;எவ்வித கலாச்சாரத்தையும் பாதிக்கும் வகையில் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.