நான் யார் என்பதை ரணிலுக்கு காட்டுவேன்! மைத்திரி அதிரடி?

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் ஆற்றவிருத்த உரையில் தமே மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சித்தலைவர்ளுக்கு இன்றிரவு விருந்தொன்றை வழங்கிய ஜனாதிபதி அவர்களுடன் நீண்ட அரசியல் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன் போது ஜெனிவா விவகாரம் குறித்து விசனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி, அனைத்தும் தனது கையை மீறி நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

“வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. உத்தரவுகள் எல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தான் செல்கின்றன.

இந்நிலையில், அமைச்சர் திலக் மாரப்பனவை அழைத்து அவர் வாசிக்கவுள்ள அறிக்கையை கேட்டேன். அதில் உள்ள பல விடயங்களை ஏற்க முடியாது. அதனால் திருத்தினேன்.

நான் திருத்திய அறிக்கையையே அவர் வாசிக்கவுள்ளார். அவருக்கும் தெரியாமல் சில விடயங்கள் நடக்கின்றன.

பிரதமர் அலுவலகம் இயக்குகின்றது. ஆனால் நான் யார் என்பதை பிரதமருக்கு விரைவில் காட்டுவேன்” என ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.