கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும்.. உருவி எடுத்த அதிகாரிகள்!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரமாக திருப்பூர் இயங்கி வருகின்றது. தொழில் நகரத்தில் வேலையாட்களை ஏற்றிச்செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் திருப்பூர் நகரில் பயணிக்கக் கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பொதுமக்களை பாதிப்படைய வைக்கும் காதை பாதிக்கக்கூடிய ஏர் ஹாரன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் திடீரென அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் பொழுது சில சமயம் விபத்துகள் ஏற்படுகின்றது.

இந்நிலையில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என சட்டமிருந்தும் அதை பின்பற்றுவர்கள் மிக குறைவு.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஒலி அளவை கருவியுடன் ஏர்ஹாரன் சோதனை நடந்தது. இந்த சோதனையை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமையில் 90 டெசிபலுக்கு மேல் ஒலியெழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சமீப காலமாக ஏர் ஹாரன்களை பயன்படுத்துவது தான் கெத்து என்ற மோகம் இளைஞர்கள் மத்தியில் பரவி வருவதாலே இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.