சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் சரவணன் இவரது மனைவி முன்னி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் முன்னி மீது கடும் கோபத்தில் இருந்த சரவணன் மனைவியை பழிவாங்குவதற்காக அவரை போலீஸிடம் மாட்டி விட முடிவு செய்துள்ளார்.
எனவே அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சென்னை ரயில் நிலையத்தில் முன்னி என்ற பெண் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு செல்போனை அணைத்துள்ளார். இதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் வெடிகுண்டு வைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தவறான செய்தியை அளித்தவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சரவணன் என்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் இந்த சம்பவத்தால் சென்னை சென்ட்ரல் ரயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






