இந்தியாவின் அதிரடி தாக்குதலின் எதிரொலி… ஐ.நா.வுக்கு ஓடிய பாகிஸ்தான்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி 2,500 துணை ராணுவ படையினர், 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து பயங்கரவாதி மோத செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு நேற்று இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவின் துரிதமான, துல்லியமான வான் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டது. பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் என 300 – 350 வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அவசரமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மக்கள் சமுதாய தலைவர்கள், ராணுவ தலைவர் ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா உள்ளிட்ட ராணுவ தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவின் தாக்குதல் குறித்தும், தற்போது அங்குள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.

இந்த கூட்டத்தில், இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வரம்புமீறல் குறித்து உடனடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளிடம் புகார் தெரிவிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை எழுப்பும் வகையில் அவர்களை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவு அமைச்சர் குரேஷி ஈடுபடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.