அமெரிக்காவில் 13 பிள்ளைகளை அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்த வழக்கில் பெற்றோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியது. டேவிட் அலன் மற்றும் லூயிஸ் துர்பின் ஆகிய தம்பதிகளே தங்கள் சொந்த பிள்ளைகளை கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தியவர்கள்.
இவர்கள் மீதான 14 குற்றச்சாட்டுகள் விசாரணை அதிகாரிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
3 வயது முதல் 30 வயது வரையான இவர்களின் பிள்ளைகளை ஆண்டுக்கணக்கில் இவர்களது குடியிருப்பில் அடைத்துவைத்து சித்திரவதை செய்ததாக கூறி கடந்த ஆண்டே பொலிசார் இவர்களை கைது செய்துள்ளனர்.
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள வழக்குகளை இவர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களின் 17 வயது மகள் வாய்ப்பமைந்தபோது வீட்டுச் சிறையில் இருந்து தப்பித்த நிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பில் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.
தப்பிய இவர்களின் மகள் ஜோர்டான், தமது மொபைலில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பெற்றோருக்கு சொந்த பிள்ளைகளிடம் இப்படி நடந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி, ஜோர்டான் தெரிவித்த கதைகளால் பலருக்கும் எழுந்துள்ளது.
தாம் இதுவரையும் வெளியுலகம் கண்டதில்லை என கூறிய ஜோர்டான், தங்களது குடியிருப்பானது எப்போதும் அழுக்கடைந்து காணப்படும் எனவும்,
மூச்சு விடவே அருவெறுப்பாக இருக்கும் என கூறிய ஜோர்டான், மாதத்தில் ஒருமுறையே குளிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சங்கிலியால் படுக்கையுடன் பிணைக்கப்பட்டிருந்ததால் அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் தொல்லை தரும் என கூறிய ஜோர்டான், வலியால் பலமுறை தமது சகோதரர்கள் அழுவதை காண நேர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 20 மணி நேரமும் தூங்க வேண்டும் என பெற்றோர் தங்களை நிர்பந்தித்ததாக கூறும் அவர்,
நள்ளிரவு தாண்டிய பின்னரே எப்போதும் உணவு தரப்படுவதாகவும், அது ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களை சந்திக்க அனுமதி இல்லை எனவும், கழிவறைக்கு செல்ல மட்டுமே சங்கிலியை அவிழ்த்து விடுவதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது மீட்கப்பட்ட 13 பேரும் சிறார்களுக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.










